திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மக்கள் தேசம் கட்சி மாவட்ட தலைவர் டென்சிங் தலைமையில் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு அளிக்க வந்தனர். அவர்களில் பெண்கள், மூதாட்டிகள் பலரும் தங்கள் கைகளில் மதுபாட்டில்களை வைத்திருந்தனர். போலீஸார் அவற்றை பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்களில் குளிர்பானத்தை ஊற்றி அவர்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. மதுக்கடை திறக்கக் கூடாது என்பதற்காக இப்படி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவல கத்தில் அளித்த மனு விவரம்:
திசையன்விளை தாலுகாவில் உள்ள கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஏற்கெனவே இங்கு 2 மதுக்கடைகள் செயல்படும் நிலையில், தற்போது 3-வதாக நவ்வலடி அருகே எருமைகுளம் பகுதியில்புதிதாக மதுக்கடை அமைக்க இருப்பதுஅதிர்ச்சி அளிக்கிறது. அந்த இடத்தின் அருகே கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. எனவே, அங்கு மதுக்கடை திறப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் எஸ். உடையார் உள்ளிட்டோர் வாயில் கருப்புதுணி கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருத்து சுதந்திரத்தை திமுக அரசு முடக்குவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில், “சட்டவிரோத, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டுவரும் அனைவர்மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
தருவையை அடுத்த கண்டித்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தர்மக்கண் (70) என்ற முதியவர் கையில் பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்தார். போலீஸார் அந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளிக்கும் எண்ணத்தில் பெட்ரோல் கேனுடன் அந்தமுதியவர் வந்தது விசாரணையில் தெரியவந்தது.
மானூர் அருகேயுள்ள களக்குடியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி மாலினி என்பவர்தனது தாயார் மஞ்சுளாவுடன் வந்து அதிகாரிகளிடம் அளித்த மனுவில், தனது தந்தை கடந்த ஏப்ரலில் பனை ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார். இதனால் தனதுகுடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு மனு அளித்துள்ளதாகவும், நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலப்பாளையத்தில் சமீபத்தில் மின்னல்தாக்கி உயிரிழந்த முத்துமாரியின் கணவர் வீ.முருகன் மற்றும் குடும்பத்தினர் அளித்தமனுவில், தனக்கு அரசு வேலை மற்றும் 2 பெண் குழந்தைகளின் கல்விச் செலவைஅரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
பயிர் சேதத்துக்கு நிவாரணம் கேட்கும் விவசாயிகள்
தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமை வகித்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தென்காசி மலையான் தெரு, சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில், ‘மலையான் தெரு, சத்யா நகரில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. தெருவின் நடுவில் கழிவுநீரோடை உள்ளது. இதனால் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகிறோம். தெருவின் இருபுறமும் கழிவுநீரோடை அமைத்து , சாலை அமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்கரன்கோவில் வட்டாரக் குழுவினர் மழையில் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அதில், ‘கடந்த 2018-19, 2020-21ம் ஆண்டில் பல விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. தற்போது தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், “புளியங்குடி வாழைமலையார் கால்வாயில் பெத்தநாயக்கன் தடுப்பணை கரையை உடைத்த மீன்பாசி குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைக்கப்பட்ட கரையை சீரமைக்க வேண்டும். மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வாசுதேவநல்லூர் கலிங்கலாற்று பகுதியில் குடியிருந்து வரும் புதிரை வண்ணார், குறவர், வள்ளுவர் சமூக மக்களுக்கு இடுகாட்டு பாதை, கழிவுநீரோடை அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago