சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஆத்தூரை அடுத்த ஆனைவாரி முட்டல் சூழலியல் பூங்காவைத் தொடர்ந்து, ஏற்காட்டில் உள்ள சூழலியல் பூங்காவிலும் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க மாவட்ட வனத்துறை திட்டமிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இயற்கை சார்ந்த சுற்றுலாத் தலங்கள் குறைவாக இருக்கும் நிலையில், அவற்றுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, வனத்துறை சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஆத்தூரை அடுத்துள்ள ஆனைவாரி முட்டல் சூழலியல் பூங்கா, ஏற்காடு சூழலியல் பூங்கா ஆகியவற்றுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.
குறிப்பாக, ஏற்காட்டுக்கு பல்வேறு மாநில சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்காட்டில் வனத்துறையின் சூழலியல் பூங்கா (மான் பூங்கா), சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. இங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க, மாவட்ட வனத்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை வண்ணத்துப் பூச்சிகளும் இங்கு பருவகாலத்தில், வலசை வந்து செல்கின்றன. எனவே, வண்ணத்துப்பூச்சிகளுக்கென வனத்துறை சார்பில் பூங்காக்கள் அமைத்து வருகிறோம்.
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், கிரிம்சன் ரோஸ், லைம் பட்டர்பிளை, காமன்கிராஸ் யெல்லோ, காமன் ஜெஸ்பெல், பிளைன் டைகர் காமன் கிரவ், கேடாப்சிலியா போரோமா, அப்பியாஸ் லைசிடா உள்ளிட்ட 70 வகையான வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த பூங்கா உள்ளது.
ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலத்தில் 60 வகையான வண்ணத்துப்பூச்சிகளைக் கொண்ட பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல், கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான சேர்வராயன்மலையில் உள்ள ஏற்காடு மான்பூங்காவிலும் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். வண்ணத்துப்பூச்சி பூங்காவில் காணப்படும் அரியவகைகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வண்ணத்துப்பூச்சிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களும் வைக்கப்படும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago