மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சிவபிரியா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த பாண்டி அனுசுயா என்பவர், தனது இரும்புப் பட்டறையை விற்க உள்ளதாகத் தெரிவித்தார். அதை வாங்குவதற்காக ரூ.32 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்ட அவர் இரும்புப் பட்டறையை விற்காமல் ஏமாற்றிவிட்டார்.
இது தொடர்பாக பாண்டி அனுசுயா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மதுரை மாநகர குற்றத்தடுப்பு போலீஸில் புகார் அளித்தேன். போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த அக். 20-ல் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பாண்டி அனுசுயா, அவரது தந்தை கண்ணன் ஆகியோரை பார்த்தோம். அவர்களை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தோம். ஆனால் அவர்களை போலீஸார் தப்பிக்க வைத்தனர். பின்னர் போலீஸார் எங்களை மிரட்டினர். எனது புகாரை குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, எனது புகாரை வேறு விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, மனுதாரர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை போலீஸார் 4 வாரங்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago