தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் மாடியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து சுகாதார நிலையத்துக்கு செல்வதற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவில் மின்கம்பம் மற்றும் அதற்கான தாங்கு கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
சாலையின் நடுவில் அருகருகே இருக்கும் இந்த மின் கம்பங்களால் சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், நோயாளிகளை நான்குசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தமிழன் மக்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் முருகன் கூறும்போது, “சாலையின் நடுவில் மின் கம்பங்கள் இருப்பதால் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை வாகனங்களில் கொண்டுவர முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக மின் வாரியத்தில் கேட்டபோது, மின் கம்பங்களை அகற்ற மின்வாரியம் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக சுகாதாரத் துறை சார்பில் மனு அளித்து, மின் கம்பங்களை இடமாற்றம் செய்வதற்கான தொகையை செலுத்தினால் உடனடியாக இடமாற்றம் செய்துவிடுவதாகவும் கூறுகின்றனர். ஆனால், மின் கம்பங்களை இடமாற்றம் செய்வதற்கு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago