தொடர் மழையால் தென்காசி பகுதியில் பலத்த சேதம் - திருமங்கலம்- கொல்லம் சாலை சீரமைக்கப்படுமா? :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தின் வழியாகச் செல்லும் கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் நான்குவழிச் சாலையை விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் மாற்று வழியில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றதால், சாலைப் பணி தொடங்கப்படாமல் உள்ளது.

இந்த சாலை சீரமைக்கப்படாத நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து புளியங்குடியைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் கூறும்போது, “திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது.

குறிப்பாக புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் அருகில் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. தென்காசி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக பயணிப்பதற்கு தகுதியற்று இருக்கிறது. நெடுஞ்சாலைத் துறையும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது” என்றார். .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்