சேலத்தில் கத்தரிக்காய் ரூ.100 தக்காளி ரூ.90-க்கு விற்பனை :

By செய்திப்பிரிவு

விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டத்தில் கத்தரிக்காய் கிலோ ரூ.100, தக்காளி ரூ.90-க்கு விற்பனையானது. வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட சில காய்கறிகள் விலை குறைவாக இருந்ததால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு முன்னர் வரை வட கிழக்குப் பருவமழை தொடர் மழையாக கொட்டிக் கொண்டிருந்தது. இதனால், விளைநிலங்களில் மழை நீர் தேங்கி விளைச்சல் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக காய்கறிச் செடிகள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டதால், காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.120 வரை விற்பனையான தக்காளி, சில நாட்களுக்கு முன்னர் வரை ரூ.60 ஆக குறைந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ரூ.90 வரை விற்பனையானது. உழவர் சந்தையில் முதல் ரக தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

கத்தரிக்காய் கிலோரூ.100-க்கும் உழவர் சந்தையில் கிலோ ரூ.90-க்கும் விற்பனையானது. கேரட் ரூ.100, அவரை ரூ.90, பீன்ஸ் ரூ.90, பீர்க்கங்காய் ரூ.75, வெண்டைக்காய் ரூ.80 என காய்கறிகள் விலை அதிகரித்து இருந்தது. எனினும், உருளைக் கிழங்கு ரூ.50, பெரியவெங்காயம் ரூ.50, சிறிய வெங்காயம் ரூ.45 என சில காய்கறிகள் விலை சற்று குறைவாக இருந்ததால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்