திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையம் வெற்றிநகரைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த். நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் 3 மர்ம நபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜய்ஆனந்த் குடும்பத்தினர் கூச்சல் எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்து தப்பிய கும்பல் எழில் நகரில் வசித்து வரும் ரிக் அதிபர் பழனிவேல் என்பவரது வீட்டுக்குள் நுழைந்து 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடி தலைமறைவாகியுள்ளனர். இதுபோல் ஊஞ்சபாளையம் பகுதியில் உள்ள ரிக் அதிபர் லோகநாதன் என்பவர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 12 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர். இதுகுறித்து திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மூவரும் தங்களது முகத்தை துணியால் மூடியிருந்ததுடன், யாராவது பிடித்தால் நழுவிச் செல்ல வசதியாக உடல் முழுவதும் எண்ணெய் தடவியிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து திருட்டு நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago