கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கட்டிடம் - வேறு வழிவகை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது : அமைச்சர் எ.வ.வேலு தகவல்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கு வேறு வழிவகை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அது தொடர்பான வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தடைபட்டிருக்கும் கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் கூறுகையில், "தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை கண்காணிக்கும் பொருட்டு என்னை நியமனம் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

வழக்கு நடைபெறும் நிலையில் ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு வேறு ஏதேனும் வழி உள்ளதா என்று, சென்னையிலிருந்து வந்து, தலைமை பொறியாளரும் நானும் ஆய்வு செய்துள்ளோம்.

இக்கட்டிட கட்டுமானப் பணிகள் குறித்து மேல்நடவடிக்கை மேற்கொள்ள முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என்றார்

இந்த ஆய்வின் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாதன், கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுதமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்