துறை தேர்வு முடிக்காததால் பணி நீக்கம் செய்ய முடியாது : உயர் நீதிமன்றம் உத்தரவு

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களை துறை ரீதியான தேர்வை முடிக்கவில்லை என்று கூறி பணி நீக்கம் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சின்னதுரை, உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

என் தந்தை சர்வேயராக பணியாற்றினார். அவர் இறந்ததால் கருணை அடிப்படையில் எனக்கு சர்வேயர் பணி வழங்கப்பட்டது. துறை ரீதியான தேர்வு மற்றும் பயிற்சியை முடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2014-ல் எனது பணி வரன் முறை செய்யப்பட்டது.

இதனிடையே, நிர்ணயிக் கப்பட்ட காலத்துக்குள் துறை ரீதியான தேர்வை முடிக்காததால் விளக்கம் கேட்டு விருதுநகர் மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் நோட்டீஸ் அனுப்பினார். பின்னர், இதையே காரணமாகக் கூறி, என்னை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு மீண்டும் பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பிறப் பித்த உத்தரவு: கருணை அடிப் படையில் பணி நியமனம் பெற்ற வர், துறை ரீதியான தேர்வை முடிக்கவில்லை எனக் கூறி பணி நீக்கம் செய்ய முடியாது. எனவே, பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை 6 வாரத்தில் அலுவலக உதவியாளர் அல்லது கள உதவியாளர் பணியில் அமர்த்த வேண்டும். காலியிடம் இல்லாவிட்டால் குரூப் 4 பணி நிலையில் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE