வீரபாண்டி ஆறுமுகம் போல, வீரபாண்டி ராஜாவும் புகழோடு வாழ்வார் என சேலத்தில் நடைபெற்ற படத்திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், திமுக மாநில தேர்தல் பணிக் குழு செயலாளராகவும் இருந்த வீரபாண்டி ராஜா என்கிற ராஜேந்திரன் (59), கடந்த அக்டோபர் 2-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி சேலம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, வீரபாண்டி ராஜாவின் படத்தை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செய்து பேசியதாவது:
மதுரை பாப்பாரப்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் நான் பங்கேற்றிருந்தபோது, வீரபாண்டி ராஜா மறைவு செய்தி கிடைத்தது. முதலில் என்னால் அதை நம்ப முடியவில்லை. இளம் வயதில் நம்மை விட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டார். எளிமையாக, பொறுமையான குணநலன்களைக் கொண்டவர். கொடுத்த பொறுப்புகளில் எல்லாம் அவர் திறம்பட செயலாற்றியவர். வீரபாண்டி ராஜாவின் மறைவு தனி மனித மறைவு அல்ல. அது திமுக-வின் தூண் சரிந்தது போன்றது.
நம்மை விட்டு மறைந்துவிட்டாலும், புகழோடு வீரபாண்டியார் வாழ்ந்து வருவது போல, தம்பி ராஜாவும் நிச்சயமாக வாழ்வார். ராஜாவின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவது, எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்வது போன்றது. வீரபாண்டியாரின் குடும்பத்தில் ஒருவராகவே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் பார்த்திபன், கவுதம் சிகாமணி, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், வீரபாண்டி ராஜாவின் சகோதரர் பிரபு, ராஜாவின் மகள் மலர்விழி ராஜா மற்றும் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago