தமிழக அளவில் இருதய சிகிச்சையில் கடந்த இரண்டு மாதங்களாக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருதய பிரிவு முதலிடத்தில் உள்ளது, என ‘டீன்’ வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ‘டீன்’ வள்ளி சத்தியமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள இருதய நோயாளிகள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதய பிரிவிற்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப் படுகின்ற னர். அவர்களுக்கு இங்கு அதிநவீன கருவிகளைக் கொண்டு மிக அனுபவம் வாய்ந்த மருத்துவர்களாலும், செவிலியர்களாலும் சிறப்பானசிகிச்சை துரிதமாகவும் துல்லிய மாகவும் வழங்கப் படுகிறது. இதன்மூலம் சேலம் மருத்துவக் கல்லூரியின் இருதய பிரிவு மண்டல அளவில் சிறப்பான பிரிவாக விளங்குகிறது.
இங்கு மாதம் தோறும் 12,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்ட 30-120 நிமிடத்திற்குள் ஆஞ்சியோகிராம் சோதனை செய்து தேவைப்படும் நோயாளிகளுக்கு இருதய ரத்த குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் சரிசெய்யப்படுகிறது. இருதய முதல்கட்ட சிகிச்சையில் கடந்த இரண்டு மாதங்களாக சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருதய பிரிவு, தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது.
இங்கு இதுவரை 6500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் 1500- க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு செயற்கை துடிப்பூட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், சிகிச்சைக்குப் பின்னர் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் அந்த நோயாளிகளுக்கு கிடைக்கும் வகையில் தமிழக முதல்வரின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மூலம் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இருதய ரத்த குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் முதல்கட்ட சிகிச்சை மூலம் சரி செய்ய முடியாத நிலையில்சிக்கலாக இருந்தால் அவர்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சிகிச்சையில் இது வரை 275 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். சிகிச்சைகளை முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பாக பணியாற்றி வரும் இருதய பிரிவு அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், துறைத் தலைவருமான டாக்டர் கண்ணன் உள்ளிட்ட குழுவினரை ‘டீன்’ வள்ளி சத்தியமூர்த்தி பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago