போலீஸ் விசாரணைக்கு பின் உயிரிழந்த - மாணவரின் பெற்றோருக்கு அமைச்சர் ஆறுதல் :

முதுகுளத்தூரில் போலீஸ் விசாரணைக்குப் பின் உயிரிழந்த கல்லூரி மாணவரின் பெற்றோருக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆறுதல் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் அருகே நீர்கோழி யேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் கீழத்தூவல் போலீஸார் விசாரணைக்குப் பின் கடந்த 5-ம் தேதி மர்மமாக உயிரிழந்தார். இந்நிலையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேற்று நீர்கோழியேந்தல் கிராமத்தில் மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது முன்னாள் எம்எல்ஏ முருகவேல், திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் திவாகரன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.

நிதி வாங்க பெற்றோர் மறுப்பு

மணிகண்டனின் பெற்றோரிடம் அமைச்சர் ரூ.1 லட்சம் நிதி வழங்கியபோது அதனை அவர்கள் ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்து விட்டனர். பின்னர் அமைச்சர் புறப்பட்டுச் சென்றதும், அவரது ஆதரவாளர்கள் பணத்தை வீட்டின் வாசலில் வைத்துவிட்டுச் சென்றதாக மணிகண்டனின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும் பெற்றோர் கூறும்போது, எங்களுக்கு நிதி வேண்டாம். மணிகண்டன் இறப்புக்கு நீதி வேண்டும் எனக் கூறினர்.

அதிமுகவினர் ஆறுதல்

அதிமுக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையிலான அக்கட்சியினர் மணிகண்டனின் பெற்றோருக்கு நேற்று ஆறுதல் கூறினர்.

தென்மண்டல ஐஜி ஆய்வு

இதனிடையே, கீழத்தூவல் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீஸாரிடம் தென்மண்டல ஐஜி அன்பு நேற்று மாலை விசாரணை நடத்தினார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன், எஸ்பி கார்த்திக், முதுகுளத்தூர் டிஎஸ்பி ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்