பாளை. ராஜேந்திரா நகர் சாலை பழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் :

பாளையங்கோட்டை ராஜேந்திரா நகர் 6-வது தெருவில் 2 ஆண்டுகளாக சரி செய்யப்படாத குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாராஜ நகர், தியாகராஜநகர், பெருமாள்புரம் போன்ற பகுதிகளில் இருந்து பாளையங்கோட்டை ரயில் நிலையம் வழியாக பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்கு வருவோர், ராஜேந்திராநகர் 6-வது தெரு வழியாக செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இங்கிருந்து முதல் தெரு வரை 5 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த சாலையில் குடிநீர் குழாய் புதிதாக பதிக்கப்பட்டது. அப்போது பழைய குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் விநியோகிக்கும் போதெல்லாம் வெளியேறி, இந்த சாலையில் சுமார் 100 அடி நீளத்துக்கு தண்ணீர் தேங்குவது தற்போது வரை வழக்கமாகிவிட்டது. இதில், 6-வது தெரு முழுவதுமே தார்ச்சாலை முற்றிலுமாக பெயர்ந்துவிட்டது.

இப்பகுதி மக்களின் புகாரின்பேரில், இங்கு வரும் மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யாமல், அந்தக்குழியில் மண்ணைக் கொட்டிச் செல்கின்றனர். ஆனால், தண்ணீர் வெளியேறுவது தொடர்வதால் பிரச்சினையும் நீடிக்கிறது. கடந்த வாரம் சாலை முழுக்க 2 லாரி மண்ணைக் கொட்டிச் சென்றுள்ளனர். இதிலும் தண்ணீர் தேங்கி, சாலை முழுக்க சகதியாகி, நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் இத்தெரு வழியாக வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன.

குடிநீர் குழாய் உடைப்பையும், சாலையையும் சீர்செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாளையங்கோட்டை கிளைச் செயலாளர் கோபாலன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் துரை தொடங்கி வைத்தார். குழாயில் நீர்க்கசிவு ஏற்படும் இடத்தில் துணியை விரித்து மாலை அணிவித்து நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தாலுகா குழு உறுப்பினர் வெங்கடாசலம் மற்றும் குடியிருப்புவாசிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE