கோவையில் 15 மலையடிவார கிராமங்களில் - யானைகள் நடமாட்டத்தை எச்சரிக்கும் ‘சைரன்’ கருவி பொருத்தம் : மனித-விலங்கு மோதலை தவிர்க்க வனத்துறை நடவடிக்கை

By க.சக்திவேல்

கோவையில் உள்ள 15 மலையடிவார கிராமங்களில் யானைகள் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கும் ‘சைரன்’ கருவியை மாவட்ட வனத்துறையினர் பொருத்தியுள்ளனர்.

கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச் சரகங்களை உள்ளடக்கியது கோவை வனக் கோட்டம். கோவையின் மேற்கு பக்கம் மலைச்சரிவுகளும், கிழக்குப் பக்கம் பட்டா நிலங்களும் இருப்பதால் இடைப்பட்ட மலையடிவார பகுதிகளையே யானைகள் தங்கள் வாழ்விடத்துக்காகவும், உணவு தேவைக்காகவும் அதிகம் பயன்படுத்துகின்றன.

தமிழகத்தில் யானை-மனித மோதல் அதிகம் நடைபெறும் இடமாக கோவை வனக் கோட்டம் உள்ளதற்கு, அடிவாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் வந்துள்ள பெரிய அளவிலான கட்டுமானங்களும், விவசாய முறை மாற்றமும் காரணமாக இருந்து வருகின்றன. உணவு பற்றாக்குறை காலங்களில் வேளாண் பயிர்கள் யானைகளை ஈர்ப்பதால் அவை உணவுக்காக வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியேறுகின்றன. கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2020 செப்டம்பர் மாதம் வரை மனித-விலங்கு மோதலில் கோவை வனக் கோட்டத்தில் மொத்தம் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக 2019-2020-ம் ஆண்டில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க, யானைகள் நடமாட்டம் உள்ளது குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் ‘சைரன்’ கருவியை மலையடிவார கிராமங்களில் கோவை மாவட்ட வனத்துறை பொருத்தியுள்ளது.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: யானைகள் அதிகம் வெளியேறும் பகுதிகள், மலையடிவார கிராமங்களில் உள்ள உயரமான கட்டிடங்கள், மேல்நிலைநீர்தேக்க தொட்டி போன்றவற்றின் மேல் ‘சைரன்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதை இயக்க வனப்பணியாளர்கள், ஊர்மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என 5 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபர்கள், யானை அந்தப் பகுதியில் இருக்கும் தகவல் அறிந்து, தங்கள் செல்போனில் இருந்து, வனத்துறையின் ‘சிம்கார்டு’ பொருத்தப்பட்ட கருவிக்கு ‘சைரன் ஆன்’ என எஸ்எம்எஸ் அனுப்பினால் ‘சைரன்’ ஒலிக்கத் தொடங்கிவிடும்.

40 விநாடிகள் ஒலிக்கும்

சுமார் 2 கி.மீ சுற்றளவுக்கு 40 விநாடிகள் வரை தொடர்ந்து அந்த சைரன் ஒலி கேட்கும். சைரன் ஒலிக்கும்போது கூடவே, அதன்மேல் பொருத்தப்பட்டுள்ள சிவப்பு விளக்கும் எரியும்.

இதைவைத்து அப்பகுதி மக்கள் யானை நடமாட்டம் இருப்பதை அறிந்துகொள்ளலாம். கோவையில் யானைகள் அதிகம் வெளியேறும் கிராமங்கள் (ரெட் ஸோன் வில்லேஜ்) என 45 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், மொத்தம் 25 இடங்களில் சைரன் பொருத்த முடிவுசெய்யப்பட்டு, பன்னிமடை, தடாகம், கெம்பனூர், வீரபாண்டி, தாளியூர், செம்மேடு, வண்டிக்காரன்புதூர், குப்பேபாளையம் உள்ளிட்ட 15 கிராமங்களில் சைரன் கருவி பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள இடங்களிலும் இந்த கருவி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதுகுறித்து அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்