ஏற்காடு மலைப்பாதையில் கனரக வாகனங்களுக்கு அனுமதி : 30 கிமீ வேகத்தில் செல்ல கட்டுப்பாடு

By செய்திப்பிரிவு

ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று (8-ம் தேதி) முதல் மீண்டும் கனரக வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 30 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சேர்வராயன் மலையில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டுக்கு சேலத்தில் இருந்து அடிவாரம் வழியாகவும், அயோத்தியாப்பட்டணம் அடுத்த குப்பனூர் வழியாகவும் செல்ல முடியும்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் ஏற்காட்டில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், சேலத்தில் இருந்து அடிவாரம் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதை 2-வது மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 15-ம் தேதி முதல் இப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதேபோல, குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பதையில் கடந்த நவம்பர் முதல்வாரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், இப்பாதையில் நவம்பர் 7-ம் தேதி முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இரு பாதைகளிலும் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கனரக வாகனங்களை தவிர பிற வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மழை குறைந்துள்ள நிலையில் இருபாதைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஏற்காடு மலைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், சேதமடைந்த மலைப்பாதைகளில் தற்காலிகமாக சீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே, அடிவாரம் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதை மற்றும் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதைகளில் 30 கிமீ வேகத்தில் கனரக சரக்கு வாகனங்கள் செல்ல இன்று (நேற்று) முதல் அனுமதிக்கப்படுகிறது.

மலைப்பாதையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல வேண்டும். வாகனங்களை முந்திச் செல்வதை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் சாலையின் விளிம்பில் செல்லக் கூடாது. மேலும், வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட எடை மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்