கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒரு முறை பயன்படுத்தி தூக்கிஎறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், குடியிருப்புமற்றும் வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள் சட்டவிரோதமாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்த தகவலை அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம். அவர்களுடைய தொடர்பு விவரங்கள் (https://tnpcb.gov.in/contact.php) என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களை பொதுமக்கள் மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு, அவர்கள் பங்களிப்பிற்காக பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago