ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என சேலம் மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலத்தில் ஆனைவாரி முட்டல் அருவி, முட்டல் ஏரி படகு குழாம், ஏரிப் பூங்கா ஆகியவை உள்ளன. இங்கு ஆண்டு முழுவதும் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் கல்வராயன் மலைப் பகுதியில் பெய்த கனமழையால், ஆனைவாரி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, மழைக்காலம் முடியும் வரை சுற்றுலாத் தலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே, பயணிகளை ஈர்க்கும் வகையில் இங்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முட்டல் ஏரிப் பூங்காவில், வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது:
சேலம் மாவட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அரியவகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அரியவகை வண்ணத்துப்பூச்சிகளும், அங்கே மழைக்காலம் தொடங்கும்போது இங்கு வலசையாக வந்து செல்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளை பாதுகாக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆனைவாரியில் 30 சென்ட் பரப்பில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கிரிம்சன் ரோஸ், லைம் பட்டர்பிளை, காமன்கிராஸ் யெல்லோ, காமன் ஜெஸ்பெல், பிளைன் டைகர் காமன் கிரவ், கேடாப்சிலியா போரோமா, அப்பியாஸ் லைசிடா உள்ளிட்ட 60 வகையான அரிய வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன.
வண்ணத்துப்பூச்சிகளுக்காக பல வகையான பிரத்யேக பூச்செடிகள் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. மழைக்காலம் முடிவுற்ற பின்னர் ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும். அப்போது, வண்ணத்துப்பூச்சி பூங்காவும் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அங்குள்ள பூங்காவில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், குழந்தைகளுக்கு புதிய விளையாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago