தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி நகை மோசடி : மேலாளர் கைது :

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தில் கேரளாவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிதி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் திருமலாபுரத்தைச் சேர்ந்த மாரி கணேசன் என்பவர் மேலாளராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி மாரிச்செல்வி என்பவரும் இதே நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இந்த நிதி நிறுவனத்தில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பலர் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். சிலர் தாங்கள் அடகு வைத்த நகைகளைத் திருப்பச் சென்றபோது, நகைகளை கொடுக்காமல் கிளை மேலாளர் மாரி கணேசன் அலைக்கழித்துள்ளார். இதுகுறித்து நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, தலைமை அலுவலத்தில் இருந்து வந்து நகைகள் இருப்பை சோதனையிட்டதில், மாரி கணேசன், தனது மனைவி மற்றும் உடன் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் நகையை எடுத்து மறு அடகு வைத்து மோசடி செய்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதில், ரூ.1 கோடி மதிப்புக்கும் மேலான நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. நிதி நிறுவன பொது மேலாளர் ராஜ் அளித்த புகாரின்பேரில், சேர்ந்தமரம் போலீஸார் விசாரணை நடத்தி மாரி கணேசன், மாரிச்செல்வி, ஆண்டிநாடானுரைச் சேர்ந்த பசுபதி, சேர்ந்தமரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, சாம்பவர்வடகரையைச் சேர்ந்த ஜெயராம், முருகன், தன்னூத்து கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, மாரி கணேசனை கைது செய்தனர். மற்ற 6 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE