வேலூர் மார்க்கெட் பகுதி, மெயின்பஜார் பகுதிகளில் தள்ளுவண்டி கடைகள் மற்றும் நடமாடும் உணவகக் கடைகளை வைக்கக் கூடாது, மீறி னால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் எச்சரித்துள்ளார்.
வேலூர் மார்க்கெட் பகுதி, மண்டி வீதி, மெயின் பஜார் மற்றும் லாங்கு பஜார் பகுதிகளில் தினசரி ஏராளமான குப்பைக்கழிவுகள் தேங்குவதால் அங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், மழைக் காலங்களில் மழைநீருடன் குப்பைக் கழிவுகள் கலந்து சேறும், சகதியுமாக உள்ளதால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
ஆணையர் திடீர் ஆய்வு
இதைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் வேலூர் மார்க்கெட், மண்டி வீதி, மெயின் பஜார் மற்றும் லாங்கு பஜார் பகுதிகளில் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு குப்பைக் கழிவுகள் குவிந்திருப்பதை கண்ட மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் அதிர்ச்சியடைந்தார்.இதையடுத்து, வேலூர் மார்க்கெட் பகுதி, லாங்கு பஜார் மற்றும் மெயின் பஜார் பகுதிகளில் குப்பைக்கழிவுகள் தேங்காமல் இருக்க தினசரி இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, பொது மக்கள் நடமாட்டமில்லாத இரவு நேரங்களில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலை யின் இருபுறங்களில் பிளிச்சிங் பவுடர் தூவ வேண்டும் என மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு ஆணையர் அசோக்குமார் நேற்று உத்தரவிட்டார்.
மேலும், ஒரு சில வியாபாரிகள் பயன்படுத்தாத பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். அவற்றையும் அப்புறப் படுத்த வேண்டும். குறிப்பாக, மெயின் பஜார், லாங்கு பஜார், காந்தி ரோடு உள்ளிட்ட பகுதி களில் தள்ளுவண்டி கடைகள், நடமாடும் உணவக கடைகளால் குப்பைக்கழிவுகள் அதிகம் தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
ஆகவே, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள், லாங்கு பஜார், மெயின் பஜார் பகுதிகளில் இனி மேல் தள்ளுவண்டி கடைகள், நடமாடும் உணவகக்கடைகளை வைக்க யாருக்கும் அனுமதி யில்லை. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, வியாபாரம் முடிந்து இரவு நேரங்களில் தள்ளுவண்டி கடைகளை அங்கேயே சிலர் நிறுத்தி விட்டுச்செல்கின்றனர். அவ்வாறும் செய்யக்கூடாது. மாநகராட்சி மண்டல அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்த உத்தர விடப்பட்டுள்ளது’’என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago