திருப்பூர் மாநகராட்சி 2-ம் மண்டலத்துக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் சிதிலமடைந்த சாலைகளை செப்பனிடவும், அப்பகுதியில் வடிகால் அமைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடும் போராட்டம் நேற்று நடந்தது.
தோட்டத்துபாளையம் சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தோட்டத்துபாளையம் மாதர் சங்க கிளை செயலாளர் ஏ.மங்கலலட்சுமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆ.சிகாமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: கடந்த பல ஆண்டு காலமாக தோட்டத்துபாளையம் நெருப்பெரிச்சல் பகுதியில் வடிகால் வசதிஇல்லாமல், சாலைகளில் கழிவுநீர், மழைநீர் தேங்கி சாலை குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது. இதுதொடர்பாக புகார் தெரிவித்தால், அவ்வப்போது தற்காலிகமாக மண்ணை கொட்டி சரி செய்யும் பணியை மட்டுமே மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் மண்ணை கொட்டி, சாலையை சமன் செய்திருந்தனர். அந்நேரத்தில் கனமழை பெய்ததால் கழிவுநீருடன் கலந்து,களிமண் சேறாக மாறிய இச்சாலையில் வாகனஓட்டிகள் பலர் வழுக்கி விழுந்தனர். இச்சாலையை விரைந்து செப்பனிட நடவடிக்கைஎடுக்க வேண்டும். அதேபோல பெருமாநல்லூர் சாலை பூலுவபட்டி சந்திப்பில் இருந்து வாவிபாளையம் வரை குண்டும் குழியுமான சாலையை புதிய தார்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago