கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் :

By செய்திப்பிரிவு

மதுரையில் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரின் நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் டிச.9-ல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக அதன் மாவட்ட தலைவர் த.முருகன், மாவட்ட செயலாளர் பே.தீனன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர், பணியேற்று ஓராண்டு நிறைவடைகிறது. பணியேற்றது முதல் கள்ளர் சீரமைப்பு ஆசிரியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதிய உயர்வு, உயர்கல்வி பட்டப்படிப்பு அனுமதி, உயர்கல்வி படித்து முடித்தவர்களுக்கு பயிற்சிக்கு செல்ல அனுமதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் உள்ளார்.

இந்நிலையில் பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி ஆசிரியர்களை ஒன்று திரட்டி விடுப்பு எடுத்து கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் வரும் டிச.9-ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திட முடிவெடுத்துள்ளோம்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளர் சீரமைப்பில் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் 77 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 47 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக செயல்படும் அவலம் தொடர்கிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரின் தனிக்கவனத்தை ஈர்த்திட டிச.9-ல் மதுரை கள்ளர் சீரமைப்பு அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்