திண்டுக்கல் அய்யலூர், கரூர் கடவூர் வனப் பகுதியை தேவாங்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக 3 மாதத்தில் அறிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கரூர் கடவூர் மலைப் பகுதி, திண்டுக்கல், திருச்சி வனப் பகுதிகளில் அரிய வகை விலங்கான தேவாங்குகள் அதிக அளவில் உள்ளன. வனப்பகுதியில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தேவாங்கு இனம் அழியும் நிலை உள்ளது. எனவே திருச்சி, கரூர், திண்டுக்கல் வனப் பகுதியில் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தேவாங்கு சரணாலயம் அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் விசாரித்தனர். மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், தேவாங்கு குறித்து வனத் துறை கணக்கெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தேவாங்கு சரணாலயம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
இதையடுத்து, திண்டுக்கல் அய்யலூர் வனப் பகுதி, கரூர் மாவட்டம் கடவூர் மலைக்குன்று பகுதியை தேவாங்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக 3 மாதத்தில் அறிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago