கொடிநாள் நிதி ரூ.81.25 லட்சம் வசூல் இலக்கு : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூல் ரூ.81.25 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கொடிநாள் தினத்தையொட்டி, முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி கொடிநாள் நிதி வழங்கி வசூலை தொடங்கி வைத்தார். 5 முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், ஊர்காவல் படை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடிநாள் நிதி வழங்கிய ஆட்சியர் பேசியதாவது:

மாவட்டத்தில் 6,729 முன்னாள் படைவீரர்கள் மற்றும் 3,425 கைம்பெண்கள் என மொத்தம் 10,154 நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டுக்கு படைவீரர் கொடிநாள் வசூல் குறியீடாக ரூ.67 லட்சத்து 71 ஆயிரம் அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சியால், கொடிநாள் வசூலாக இதுவரை ரூ.76 லட்சத்து 4 ஆயிரத்து 984 ஆக மொத்தம் 112 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 2021-ம் ஆண்டுக்கு கொடிநாள் வசூல் இலக்காக ரூ.81 லட்சத்து 25 ஆயிரம் வசூல் செய்திட அரசால் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக் காட்டிலும் கூடுதலாக வசூல் செய்யப்படும். நமது மாவட்டத்தில் உள்ள அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, தனித்துணை ஆட்சியர் பாக்கியலட்சுமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பிரமணி, முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குநர் கர்னல் (ஓய்வு) வேலு, பிரிகேடியர் (ஓய்வு) எம்.சுந்தரம், கர்னல் (ஓய்வு) சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்