மேட்டூர் அணை உபரிநீரால் 6 ஏரிகள் நிரம்பின :

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணை உபரி நீர்த் திட்டத்தில், பணிகள் நிறைவுற்ற 7 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லும் பணியில், 6 ஏரிகள் முழுமையாக நிரம்பி, 7-வது ஏரிக்கு நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

மேட்டூர் அணை நிரம்பியதும், அதன் உபரி நீரை, சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ரூ.565 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், மேட்டூர் அணையை அடுத்துள்ள திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி, ஏரிகளுக்கு காவிரி உபரி நீரை கொண்டு செல்வதற்கான குழாய் அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது.

தற்போது, மேட்டூர் அணை நிரம்பி, அதன் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேட்டூர் உபரி நீர்த் திட்டத்தில், பணிகள் முடிவுற்ற 7 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்வதற்காக, கடந்த 16-ம் தேதி நீரேற்று நிலையம் இயக்கி வைக்கப்பட்டது. அதன்படி, திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் உள்ள மோட்டார்கள் மூலம் காவிரி நீர் பம்ப்பிங் செய்யப்பட்டு, 12 கிமீ., தொலைவில் உள்ள காளிப்பட்டி ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

காளிப்பட்டி ஏரி நிரம்பியதைத்தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாகசின்னேரி, ராயப்பன் ஏரி, மானாத்தாள் ஏரி, டி.மாரமங்கலம் (தொளசம்பட்டி ஏரி), பெரியேரிப்பட்டி ஏரி ஆகியவையும் மேட்டூர் உபரி நீரால் நிரப்பப்பட்டன. தற்போது, பெரியேரிப்பட்டி ஏரியில் இருந்து, தாரமங்கலம் ஏரிக்கு உபரிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நீரேற்று நிலையத்தில் இருந்து, மேட்டூர் அணை உபரி நீர் விநாடிக்கு 35 கனஅடி வீதம் எடுக்கப்பட்டு, ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது உபரி நீர் மூலம் 6 ஏரிகள் நிரப்பப்பட்டுள்ளன. தாரமங்கலம் ஏரிக்கு உபரி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

ஒரு வாரத்துக்குள் இந்த ஏரியும் நிரம்பிவிடும். இதுவரை 80 மில்லியன் கனஅடி நீர், ஏரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு உட்பட்ட 100 ஏரிகளில், சரபங்கா ஆற்றின் மூலமாக 40 ஏரிகள் நிரம்பிவிட்டன. 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் 30 சதவீதம் வரை நிரம்பி இருக்கின்றன’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்