திருச்சி மாவட்டம் அரியாற்றில் நேற்று மேலும் ஓரிடத்தில் கரை உடைந்ததால் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, பிராட்டியூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை 2-வது நாளாக மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று முன்தினம் 27 செமீ மழை பெய்ததால், அங்குள்ள அப்பையர் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய மழைநீர் அரியாற்றில் கலந்ததால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.இதன் காரணமாக அரியாற்றில் புங்கனூர் அருகே ஏற்கெனவே உடைப்பு ஏற்பட்ட இடத்தில் நேற்று முன்தினம் மீண்டும் 50 மீட்டர் அளவுக்கு உடைப்பு ஏற்பட்டதால், புங்கனூர், பிராட்டியூர், தீரன்நகர் பகுதியில் உள்ள வயல்கள், குடியிருப்புகள் மற்றும் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சாந்தாபுரம் அருகே அரியாற்றில் மேலும் ஓரிடத்தில் நேற்று அதிகாலை உடைப்பு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள வயல்கள் மற்றும் பிராட்டியூர், காவேரி நகர், முருகன் நகர், வர்மா நகர், தீரன் நகர், புங்கனூர், ஆண்டாள் நகர், பூண்டி மாதா நகர், கணபதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தின் அளவு அதிகரித்ததால், மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் கடும் அவதிக்குள்ளா கியுள்ளனர்.
தீரன்நகர் முதல் பிராட்டியூர் வரை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் ஒரு கி.மீ தொலைவுக்கு பெருக்கெடுத்து ஓடியதால், திண்டுக்கல்லில் இருந்து வரும் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மணிகண்டம் வழியாக திருப்பிவிடப்பட்டன.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அரியாறு கோட்ட அலுவலர்கள் கூறும்போது, “அரியாற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், ஆற்றில் இருந்து தண்ணீர் வெளியேறுவது படிப்படியாக குறைந்துவிடும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago