கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் : விவசாயிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் எறையூர் சர்க்கரை ஆலை கூட்ட அரங்கில் ஆலையின் தலைமை நிர்வாகி கே. சுரேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதிகாரிகள் தரப்பில் தலைமைக் கரும்பு அலுவலர் ரவிச்சந் திரன், துணைத்தலைமை ரசாயனர் பெரியசாமி, துணைத் தலைமைப் பொறியாளர் நாராயணன், கணக்கு அலுவலர் ஜான்பிரிட்டோ, தொழி லாளர் நலஅலுவலர் ராஜாமணி, கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மு.ஞானமூர்த்தி, ஏ.கே. ராஜேந்திரன், சீனிவாசன், பெருமாள், ராமலிங்கம், சக்திவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், பருவமழை பாதிப்பு காரணமாக ஆலையில் இம்மாத இறுதியில் கரும்பு அரைவையை தொடங்கவும், ஆலையில் 107 நாள் அரைவை செய்வது எனவும், ஒரு நாளைக்கு 2,542 டன் அரைப்பது எனவும், இந்த ஆண்டில் 2,20,000 குவின்டால் சர்க்கரை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் தரப்பில், தமிழக அரசு முத்தரப்பு கூட்டத்தை கூட்டி கரும்புக்கான விலையை தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி டன்னுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஆலையின் இணைமின் திட்டத்துக்கு ரூ.10 கோடி பங்குத் தொகை கொடுத்த விவசாயிகளுக்கு பங்கு பத்திரம் வழங்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வழங்க வேண்டிய ரூ.7 கோடி பாக்கித்தொகையை மோகனூர் சர்க்கரை ஆலையிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2020-2021ம் ஆண்டுக்கு அரசு அறிவித்த கூடுதல் தொகை டன்னுக்கு ரூ.42.50ம் தற்போது தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகை ரூ.150-ம் சேர்த்து டன்னுக்கு ரூ.192.50-ஐ வரும் பொங்கலுக்குள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்