பாதாள சாக்கடை உடைந்து பள்ளிகள் அருகே தேங்கிக்கிடக்கும் கழிவுகள் - நெல்லையில் மாற்றுத்திறன் மாணவர்கள் பாதிப்பு :

திருநெல்வேலியில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது கனமழை பெய்தது. மழையின்போது தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில்

தண்ணீர் தேங்குவதும், மழை ஓய்ந்தபின் தண்ணீர் வடிவதுமாக உள்ளது. கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பி மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தெருக்களில் பெருக்கெடுப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. பாதாள சாக்கடைகளிலும் உடைப்பெடுத்து மழைநீருடன் சாக்கடை கலந்து பல பகுதிகளில் வடியாமல் தேங்கியிருக்கிறது.

பாளையங்கோட்டையில் ஏ.ஆர். லைன் சாலையிலிருந்து மகாராஜ நகர் உழவர் சந்தைக்கு செல்லும் சாலையில் பார்வையற்ற மாற்றுத் திறன் மாணவ, மாணவியர் பயிலும் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு முன் கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை உடைந்து சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தேங்கிக்கிடக்கிறது.

இதுபோல பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு எதிரே திருவனந்தபுரம் சாலையிலிருந்து அம்பாசமுத்திரம் சாலை பிரியும் முக்கிய சந்திப்பில் பாதாள சாக்கடை உடைந்து குளம்போல கழிவுகள் தேங்கிக்கிடக்கின்றன. இங்கு காதுகேளாத மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் பயிலும் மேல்நிலைப்பள்ளி இருக்கிறது.

மாணவ, மாணவியர் உள்ள பகுதிகளில் கழிவுகள் தேங்கிக்கிடப்பதால், அவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளது. மழை பாதிப்புகளை சீரமைத்ததாக மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் பட்டியல் வெளியிட்டது. இதுபோன்ற பாதிப்புகளையும் சீரமைக்க விரை ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE