திருட்டு வழக்கில் தொடர்புடைய ஊராட்சி மன்ற தலைவியின் - கணவரை கைது செய்ய வந்த : போலீஸாரை தாக்கிய 10 பேர் கைது :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா(44). இவரது கணவர் கணேஷ் (52). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதி குற்றப்பிரிவு காவல் துறையினர் திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்புடைய ஊராட்சி மன்ற தலைவி சுவிதாவின் கணவர் கணேஷை நேற்று முன்தினம் கைது செய்து, அவரது கையில் விலங்கிட்டு காரில் வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்றனர்.

இதைக்கண்ட அவரது ஆதரவாளர்கள், கோவை மாவட்டகாவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் எப்ஐஆர் நகலை காட்டியும், அவர்கள் அதை வாங்கி கிழித்தெரிந்தனர்.

இதையடுத்து, கோயம்புத்தூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானப்பிரகாசம், காவலர்கள் ராஜா முகமது, வடிவேல் உள்ளிட்ட 5 காவலர்களையும் கணேஷ் ஆதர வாளர்கள் சரமாரியாக தாக்கினர்.

மேலும், காவலர் ராஜாமுகமது கையிலும், கணேஷ் கையிலும் பூட்டியிருந்த கைவிலங்கை கணேஷ் ஆதரவாளர்கள் அருகாமையில் உள்ள வெல்டிங் இயந்திரம் மூலமாக கைவிலங்கை துண்டித்து கணேஷை அழைத்துச் சென்று தலைமறைவாகினர்.

தாக்குதலில் காயமடைந்தகுற்றப்பிரிவு காவலர்கள் ஆம்பூர் அரசு மருத்துமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் கோவை குற்றப்பிரிவு காவல் துறையினர் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, திருப்பத் தூர் எஸ்.பி., டாக்டர் பால கிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கணேஷ் மீது நகை திருட்டு, வாகன திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருட்டு வழக்கில் தொடர்புடைய கணேஷை கைது செய்ய வந்த கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை தாக்கி, கைது செய்யப்பட்ட கணேஷை தப்பிச்செல்ல உதவிய அவரது மனைவியும், ஊராட்சி மன்றத் தலைவியுமான சுவிதா உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சீனிவாசன்(29), மணிகண்டன் (30), ராஜ்கிரண் (33), மான்சிங் (30), அமர்நாத்( 32), அன்பு (39), பீர்முகமது (41), மாயன்( 33) மற்றும் துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவர், கைவிலங்கை வெட்டி எடுத்த வெல்டிங் கடை தொழிலாளி சுரேஷ் என 10 பேரை நேற்று கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, தலைமறை வான ஊராட்சி மன்ற தலைவி சுவிதா, அவரது கணவர் கணேஷ் உட்பட 7 பேரை காவல் துறையினர் 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்