சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த மேலும் ஒரு பயணிக்கு கரோனா : அரசு மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்த மற்றொரு பயணிக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தொற்றுப் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்படுபவர் மட்டுமே சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்த 63 வயதான மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒருவருக்கு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள பிரத்யேக சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய, சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல, சிங்கப்பூரில் இருந்து டிச.2-ம் தேதி திருச்சி வந்த 56 வயதான தஞ்சாவூரைச் சேர்ந்த நபருக்கு ஏற்கெனவே கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்