பாளை.யில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் : நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாக மக்கள் புகார்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது பாளையங்கோட்டை கேடிசி நகர்கீழநத்தம் 9-வது வார்டு இஸ்மாயில் நகர் பி காலனி முதல் தெரு பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:

மழைக் காலத்தில் இஸ்மாயில் நகர் தெருக்களில் இருக்கும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துவிடுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மின்சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளன. குடிநீர் தொட்டி மற்றும் கழிவுநீர் தொட்டிகளுக்குள் தண்ணீர் புகுந்து மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வீடுகளைச் சுற்றி நாள் கணக்கில் தண்ணீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை கனகநாயனார் தெரு மக்கள் அளித்த மனுவில், “கனகநாயனார் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகிறது. கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தியாகராஜநகர் பொதுநலச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “தியாகராஜ நகர் பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் குளத்தை நோக்கிச் செல்லும் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர் மாவட்டகாங்கிரஸ் தலைவர் கே. சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், “ மேலப்பாளையம் நடராஜபுரத்தைச் சேர்ந்த முத்துமாரி மற்றும் பாலகாளீஸ்வரி ஆகியோர் கடந்த 5-ம் தேதி மாலையில் நெல் நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து உதவிகளை வழங்கவும், அவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சிகுளம் ஊராட்சி தலைவர் மதுசூதனன், துணைத் தலைவர்மன்சூர் அலி தலைமையில் அளித்தமனுவில், “ குறிச்சிகுளம் மற்றும்அதைச் சுற்றியுள்ள மானூர் ஒன்றியத்தில் ஏராளமானோர் வீட்டுமனை இல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில், குறிச்சிகுளம் கிராமத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதியில் சமத்துவபுரம் குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்