திருவண்ணாமலையில் ரூ.38.74 கோடியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை நகரம், அண்ணா சாலை – திண்டிவனம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.38.74 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, “புதுச்சேரி – பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையை இணைக்கும் வகையில், திருவண்ணாமலை நகரில் ரூ.38.74 கோடி மதிப்பில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், காலதாமதம் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தி, ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. டிசம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. அதன் பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவரது திருக்கரங்களால் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தப்படும்.
திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே உள்ள டான்காப் ஆலை மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தை ஒருங்கிணைந்து, புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டான்காப் ஆலையின் இடம், விவசாய துறையின் கட்டுப் பாட்டில் உள்ளதால், அந்த துறையின் அமைச்சரை சந்தித்து, டான்காப் இடத்தை நகராட்சியிடம் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. கோப்புகள் நகர்வு நடைபெற்று வருகிறது” என்றார்.
ரயில்வே மேம்பாலத்தில் காரில் ஏற மறுத்த அமைச்சர்
ரயில்வே மேம்பாலத்தை 330 மீட்டர் தொலைவு நடந்து சென்று அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அவருடன், ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் நடந்து சென்றனர். இந்நிலையில் வழக்கம்போல், அவர்களது கார்களும், அவர்களை பின்தொடர்ந்து அணிவகுத்தன. ஆய்வுக்கு பிறகு, காரில் ஏறுமாறு அமைச்சரை அங்கிருந்தவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர், அவ் வழியாகவே மீண்டும் நடந்து சென்றார். அவருடன் ஆட்சியர் உள்ளிட்டோரும் சென்றனர். அதன்பிறகு அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் அவரவர் கார்களில் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர் திறந்து வைப்பதற்கு முன்பாக, மேம்பாலத்தில் காரில் அமைச்சர் எ.வ.வேலு பயண செய்திருந்தால் பெரும் விமர்சனத் துக்குள்ளாகி இருக்கும். அதனால் அவர், காரில் பயணிப்பதை தவிர்த்துள்ளார். ஒட்டுநர்களின் ஆர்வத்தால் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago