தொடர் மழை காரணமாக பரமத்தி வேலூர் வாழை சந்தையில் வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வழியாக காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. இதனை மையப்படுத்தி காவிரிக் கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. பூவன், பச்சைநாடன், கற்பூர வள்ளி உள்ளிட்ட வாழை ரகங்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழை பரமத்தி வேலூர் வாழைச் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கிருந்துசேலம், கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்கள்மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.200, ரஸ்தாளி வாழைத்தார் ரூ.250, பச்சைநாடன் வாழைத்தார் ரூ.200, கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200 மற்றும் மொந்தன் வாழைக்காய் ரூ.5-க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த வாரம் அதன் விலை பெருமளவு சரிந்துள்ளது.
தற்போது பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.150-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும் விற்கப்படுகிறது. பச்சைநாடன் ரூ.150, கற்பூரவள்ளி ரூ.150, மொந்தன் வாழைக்காய் ரூ.3-க்கு விற்பனையானது. விலைவீழ்ச்சியால் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழை சீசன் முடிந்தால் வாழைக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago