கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மாவட்டம் பின்தங்கியிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்ட கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தமிழக அளவில் மதுரை மாவட்டம் பின்தங்கியிருப்பதாக சமீபத்தில் மதுரைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தமிழக அளவில் சராசரியாக 78 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் மதுரையில் 71 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதில் இரண்டாம் தவணை தடுப்பூசியை 32 சதவீதம் பேர் மட்டுமே போட்டுக் கொண்டுள்ளனர் என்று கூறினார்.
தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோரை பொதுவெளியில் அனுமதிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் அமல் படுத்தி வருகின்றன. ஆனால், மதுரையில் இந்த கட்டுப்பாடுகள் முறையாக பின் பற்றப்படாமல் பெயரளவிலேயே உள்ளன. இதுவரை 25 லட்சத்து 52 ஆயிரத்து 28 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.
ஆனால் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். இதற்கு முன்பு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறி 5 லட்சத்து 9 ஆயிரத்து 380 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
எனவே, மற்ற மாவட்டங்களைப் போல் மதுரையிலும் கட்டுப்பாடுகளை அதிகரித்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவித்து 100 சதவீத இலக்கை எட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "தற்போது தினமும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். விரைவில் 100 சதவீத இலக்கு எட்டப்படும் என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago