நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மத்திய மற்றும் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர்கள் சிவலிங்கம் (கிழக்கு), செல்வகணபதி (மேற்கு),எம்பி பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு பேசியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதிமுக-வினர், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளனர். அதனால், அவர்கள் வசதியாக இருக்கிறார்கள். நாம் மக்களுக்காக உழைத்திருக்கிறோம். அதிமுக-வினரிடம் பணம் இருப்பது மட்டுமே திமுக-வினரை விட கூடுதல் தகுதி.
சட்டத்துக்கு உட்பட்ட கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பார். கூட்டுறவு சங்கங்களில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கூட்டுறவு சங்க விதிகள் இப்போது மாறிவிட்டன. அவற்றை கலைப்பது இயலாது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே நாளில் நடக்கும். அதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும். வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். போட்டியிட வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறி சேலம் மாவட்டத்தில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால், இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டவர் முதல்வர் ஸ்டாலின். இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு மேல்முறையீடு செய்து, இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் இருந்து பாமக ஏற்கெனவே வெளியேறிவிட்டது. எனவே, வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைப்பது உறுதி.
முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் வரும் 11-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். சேலத்தில், நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் ஆகியவற்றில் இரு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 நாட்கள் முகாம் நடத்தி மக்களிடம் 47 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 27ஆயிரம் மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், 10 ஆயிரம் மனுக்களுக்கும் நலத்திட்டஉதவிகள்வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago