பண்டிகைக் கால நெரிசலைத் தவிர்க்க திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு வாரம் 2 முறை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தீபாவளி பண்டிகையின்போது திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியாக தாம்பரத்துக்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பயணிகளுக்கு இந்த சிறப்பு ரயில் பெரிதும் உதவியாக இருந்தது.
தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
ஆனால், ரயில்களில் இடம் கிடைக்காத நிலை உள்ளது. பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் மெயில், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இடம் கிடைக்காமல் காத்திருப்பு பட்டியலில் இருப்ப தால், பயணிகள் வருத்தத்தில் உள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணிகள் நலன் கருதியும் திருநெல்வேலியில் இருந்து வாரம் இருமுறை சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து பயணிகள் நலச்சங்கத்தினர் கூறும்போது, “திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் தாதர் எக்ஸ் பிரஸ், பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகளை பயன்படுத்தி, வாரம் 2 முறை தென்காசி வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கலாம். அவ்வாறு சிறப்பு ரயில் இயக்கினால் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் காலியாக நிறுத்தி வைக்கப்படும் ரயில் பெட்டிகள் மூலம் ரயில்வே துறைக்கு வருவாயும் கிடைக்கும். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் தென்காசி வரை இந்த ரயிலை பயன்படுத்தி, சென்று வர உதவியாக இருக்கும்.
ரயில்வே துறை தாமதம் செய்யாமல் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago