செய்யாற்றை கடக்கும் போது உயிரிழந்த முதியவரின் உடலுடன் விநாயகபுரம் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த விநாயகபுரம் கிராமத்தில் வசித்தவர் பழனி(68). இவர், கொழப்பலூர் கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்று விட்டு வீடு திரும்பும் வழியில், செய் யாற்றை கடக்கும்போது சுழலில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இதற்கிடையில், ஆவணியாபுரம் அணைக்கட்டு அருகே அவரது உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது.
25 ஆண்டுகளாக கோரிக்கை
இதையறிந்த கிராம மக்கள், விநாயகபுரம்–பெரிய கொழப்பலூர் இடையே பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற தங்களது 25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி யிருந்தால், உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறும்போது, “விநாயகபுரம் – பெரிய கொழப்பலூர் இடையே பாலம் கட்டிக் கொடுத்தால், 10 கிராம மக்கள் பயன்பெறுவர். எங்களது கால் நூற்றாண்டு கோரிக்கையை ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தி புறக்கணித்து வருகின்றனர். செய்யாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், உயிரிழப்புகள் தொடர்கிறது. பாலம் கட்டி கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு வருவாய் மற்றும் பெரணமல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பாலம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. பின்னர், பழனியின் உடல், பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து பெரணமல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago