பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தாரா? : முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் விளக்கம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் நேற்று மீண்டும் அக்கட்சியில் இணைந்ததாகப் புகைப்படத்துடன் தகவல் பரவியது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

அதிமுகவில் சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தியபோது மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் அவருக்கு ஆதரவாக செயல்பட்டார். இவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருந்து வந்தார்.

அந்த விசுவாசத்துக்குப் பரிசாக அதிமுக வழிகாட்டுதல் குழுவில் மாணிக்கத்தை ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறச் செய்தார். இவருக்கு இந்த பதவி வழங்கியதால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.

குறிப்பாக மதுரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோருக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை. அந்த பதவிக்கான அங்கீகாரத்தை மதுரை மாவட்டத்தில் அவருக்கு வழங்கவில்லை என்று மாணிக்கம் வருத்தப்பட்டு வந்தார்.

இதேபோல் மதுரை மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலர் கட்சியில் ஓரம் கட்டப்பட்டுள்ளதாக அவரது கவனத்துக்கு பலமுறை மாணிக்கம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தால் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரை மீறி மாணிக்கத்துக்கு ஆதரவாக செயல்பட முடியவில்லை.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில்கூட மதுரை மாவட்டத்தின் அனைத்து அதிமுக வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவுக்கு கட்சித் தலைமையில் இருந்து பணம் வழங்கப்பட்டது. ஆனால் மாணிக்கத்துக்கு மட்டும் வழங்கப்படவில்லை. அதனால் தேர்தலில் தோல்வியடைந்ததாக மாணிக்கம் வருத்தத்தில் இருந்தார். அந்த அதிருப்தியில்தான் அவர் பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் முன்னிலையில் மாணிக்கம் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக சமூக வலைதளங்களில் படத்துடன் தகவல் பரவியது. அது உண்மையா என்று மாணிக்கத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

நான் மீண்டும் அதிமுகவில் இணையவில்லை. ஆர்பி.உதயகுமாருடன் இருப்பது பழைய படம். நானாகத்தான் விரும்பி பாஜகவில் இணைந்தேன். அதிமுகவில் இருந்தபோதும் என்னை வாழவிடவில்லை, அங்கிருந்து பாஜகவுக்கு வந்த பிறகும் என்னை வாழவிடமாட்டேன் என்கிறார்கள்.

பிரதமர் மோடியின் செயல்பாடுகள் பிடித்ததால் அக்கட்சியில் சேர்ந்தேன். என்னை யாரும் வற்புறுத்தி அக்கட்சியில் சேர்க்கவில்லை. கொள்கை ரீதியாக ஒரு முடிவெடுத்துவிட்டேன். சரியோ, தவறோ அதை அடிக்கடி மாற்றக்கூடியவன் நான் இல்லை. மாற்றமும் இல்லை. முன்பு உழைக்க வாய்ப்பு இல்லாத இடத்தில் இருந்தேன். தற்போது உழைக்கிற இடம் தேடி வந்து இருக்கிறேன்.

நான் பதவிகள் வரும் என நினைத்து ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கவில்லை. அவர் மீது மரியாதை வைத்துள்ளேன். என்னை வழிகாட்டுதல் குழுவில் சேர்த்தது முதல் பிரச்சினை ஏற்பட ஆரம்பித்தது. யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்