அனைத்து சமுதாயத்தினருக்கும் குலதெய்வமாக அய்யனார் வழிபாடு உள்ளதால், இதை குக்கிராம அளவில் விரிவாக ஆய்வு செய்து ஆவணப்படுத்த வரலாற்று ஆய்வாளர்கள் முயற்சிக்க வேண்டும் என அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
மதுரையில் மரபு இடங்களின் நண்பர்கள் அமைப்பு சார்பாக, நாட்டுப்புற தெய்வங்களும் தமிழ் பண்பாட்டு மரபுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் பாண்டிய நாட்டுக் கிளை தொடக்க விழா நேற்று நடந்தது.
தொல்லியல்துறை ஆய்வாளர் கி.ஸ்ரீதரன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை தலைவர் வீ.செல்வக்குமார், ஆய்வாளர்கள் சு.நாராயணசாமி, சு.த.காந்திராஜன், த.ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
அய்யனார் வழிபாடு குறித்து ஆய்வாளர்கள் பேசியதாவது:
அதிகம் ஆய்வு செய்யப்படாத நாட்டுப்புற தெய்வங்களின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சென்றால்தான், தெய்வங்களின் சிறப்பு எவ்வாறானது என்பதை அறிய முடியும். இதில் அய்யனார் மிகுந்த முக்கியத்துவம் பெறுவார் என்றனர்.
அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: மதுரையை 2-வது தலைநகரம் என்கிறோம். ஆனால், கோவை, சேலம், திருச்சி மாவட்டங்கள் வேகமாக வளர்கிறது.
கோயில் நகர் மதுரை இன்னும் வளர்ச்சி பெறாத நிலை உள்ளது. இதை மாற்ற முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார். அய்யனார் அனைத்து சமுதாயத்தினரும் வழிபடும் தெய்வமாக உள்ளார்.
காலையில் நான் சுவாமி கும்பிடாமல் எங்கும் போக மாட்டேன். எனது மனைவி முழுநேரமும் சிவனுக்கு தொண்டு செய்கிறார். ஜல்லிக்கட்டு என்னவென்று தெரியாத வெளிநாட்டில்கூட அதற்கு ஆதரவாக போராடினர். இவையெல்லாம் தமிழக கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. எந்த நாட்டில் வேலை பார்த்தாலும் தமிழை மறக்கக் கூடாது. அய்யனார் வழிபாடு குறித்து குக்கிராம அளவில் ஆய்வு செய்ய வரலாற்று ஆய்வாளர்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago