அடுத்த 3 ஆண்டுகளில் - 24 கோடி நீதிமன்ற ஆவண பக்கங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

அடுத்த 3 ஆண்டுகளில் 24 கோடி நீதிமன்ற ஆவண பக்கங்கள் டிஜிட்டல்மயமாக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறினார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சட்ட தின விழா, கம்ப்யூட்டர் மையம் மற்றும் அதிகாரிகள் குடியிருப்புகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமை வகித்தார். உயர் நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி புஷ்பா சத்யநாராயணா வரவேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன் கம்ப்யூட்டர் மையத்தையும், எம்.எம்.சுந்தரேஷ் அதிகாரிகள் குடியிருப்பையும் திறந்து வைத்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், நீதித்துறையின் கட்டமைப்புகளும், நிதி ஒதுக்கீடும் குறைவாக உள்ளது. இதை அரசு சரி செய்யும் என என நம்புகிறோம். நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் மதுரை கிளை சிறப்பாக செயல்படுகிறது என்றார்.

கணினி மையத்தை திறந்து வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசியது: 2005-ல் மத்திய அரசு நீதித்துறையில் தகவல் தொழில்நுட்பத்தை கொண்டுவந்தது. 2013-ல் ஆண்டு நீதிமன்றத்தில் இணையவழி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015-லும், உயர் நீதிமன்றக் கிளையில் தற்போதும் செயல்படுத்தப்பட்டுள்ளன. நல்ல தலைமை இருந்தால் தவறான அரசியலமைப்புக்கூட சரியாகிவிடும் என அம்பேத்கர் தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசியது: சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுரை 1 கோடி ஆவண பக்கங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 24 கோடி ஆவண பக்கங்களை மூன்று ஆண்டுகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதே இலக்கு. இதற்காகவே மதுரை கிளையில் கணினி மையம் திறக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததால் வழக்குகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE