சேலம், நாமக்கல், ஈரோட்டில் கொட்டிய மழையால் பாதிப்பு - மின்மாற்றி, கம்பங்கள் சாய்ந்தன, பயிர்கள் மூழ்கின :

By செய்திப்பிரிவு

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது. சேலத்தில் மின்மாற்றி மற்றும் 3 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. மீண்டும் நள்ளிரவு பெய்த கனமழை நேற்று அதிகாலை வரை நீடித்தது.

மழையால் சேலம் கிச்சிப்பாளையம், நாராயணன் நகர், பச்சப்பட்டி, ஜங்ஷன், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது.

களரம்பட்டி பகுதியில் உள்ள பாரதியார் நகர் கொல்லங்காடு ஓடையை ஒட்டி இருந்த மின்மாற்றி மற்றும் அருகில் இருந்த 3 மின்கம்பங்கள் மழையின்போது வீசிய காற்றில் சரிந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

கோரிமேடு அடிவாரம் பகுதியில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியபோது, அவ்வழியாக சென்ற அரசு நகரப் பேருந்து சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கியது. மாற்றுப் பேருந்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

எடப்பாடியில் பெய்த மழையால் குரும்பபட்டி புங்கனேரி, வேண்டனூர் ஏரி நிரம்பி ரங்கம்பாளையம், தானமுத்தியூர், பெரியநாச்சூர், சின்னநாச்சூர் கிராமங்களில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது. இக்கிராமங்களில் வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கின.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: எடப்பாடி 95, மேட்டூர் 69, சங்ககிரி 58.2, சேலம் 44.7, காடையாம்பட்டி 11, ஓமலூர் 10, ஏற்காடு 3 மிமீ மழை பதிவானது.

தி.கோட்டில் விடிய விடிய மழை

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. சேலம் - நாமக்கல் சாலையில் வெள்ளம்போல் மழைநீர் பாய்ந்தோடியதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், திருச்செங்கோடு உழவர் சந்தை வளாகத்தில் மழைநீருடன், சாக்கடைக் கழிவு நீரும் கலந்து குளம்போல் தேங்கி நின்றது. இதனால் உழவர் சந்தை வியாபாரிகள், காய்கறி வாங்க வந்த மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

எலச்சிபாளையத்தில் உள்ள ஓடையில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஓடையில் ஏற்பட்ட உடைப்பால் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்தது. மேலும், எலச்சிபாளையம் - இலுப்பிலி இடையே போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.): மோகனூர் 94, திருச்செங்கோடு 53, ராசிபுரம் 48.30, புதுச்சத்திரம் 38, சேந்தமங்கலம் 19, பரமத்தி வேலூர் 15, குமாரபாளையம் 11.4, மங்களபுரம் 3.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் நெரிசல்

ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று காலை பலத்த மழை பெய்தது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் ஓடை, சுண்ணாம்பு ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.): தாளவாடி 18, சத்தியமங்கலம் 10, அம்மாபேட்டை 9.6, கவுந்தப்பாடி 7.6, கொடிவேரி 6, பவானி 4.4,குண்டேரிப்பள்ளம் 4.6 மி.மீ. மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்