ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து திருநாள் நேற்று தொடங்கியது. இதில் உற்சவர் நம்பெருமாள் ஒய்யார சவுரிக் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பகல் பத்து திருநாளின் முதல் நாளான நேற்று காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, 8.15 மணிக்கு பகல் பத்து (அர்ச்சுன) மண்டபத்தை வந்தடைந்தார். காலை 9 முதல் பகல் 1 மணி வரை அரையர் சேவை நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி, 3 மணிக்கு வெள்ளிச்சம்பா அமுது செய்தல் ஆகியவை நடைபெற்றன.
அர்ச்சுன மண்டபத்துக்கு வந்த நம்பெருமாள் ஒய்யார சவுரி கொண்டை, தங்கக் கிளி, ரத்தின அபயகஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு ஆகிய திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சேர்ந்தார்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் ரங்கம் கோயிலுக்கு வருவார்கள் என்பதால் கோயில் வளாகத்திலேயே புறக்காவல் மையம் திறக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பகல் பத்து முதல்நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்த நம்பெருமாளை தரிசித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago