தேர்தல் ஆணையம் தேதி அறிவித்தால் - உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்

By செய்திப்பிரிவு

தேர்தல் ஆணையம் தேதி அறிவித்தால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி உறையூர் பாத்திமா நகரைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணன் (65) என்பவர், அண்மையில் பெய்த தொடர் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அண்மையில் பெய்த தொடர் மழையால் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள தியாகராய நகர், பெஸ்கி நகர், ஏஐடி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது. இப்பகுதிகளில் சாலைகளும் சரியாக இல்லை. எனவே, வெக்காளியம்மன் கோயிலில் இருந்து கோரையாறு வரை இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்படும். மழைநீர் அதிகமாக தேங்கக்கூடிய பகுதிகளில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு ரூ.18.5 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம்தான் அறிவிக்க வேண்டும். அவர்கள் தேதி அறிவித்தால், தேர்தலை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்