வேலூர் அருகே சாராய வேட்டைக்குச் சென்ற காவலர்கள் மீது கற்களால் தாக்கிய மலை கிராமத்தைச் சேர்ந்தவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் கலால் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தீனதயாளன் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் சிவராஜ், சுரேஷ் ஆகியோர் சோழவரம் அருகேயுள்ள மேற்கு குட்டை பகுதியில் சாராய வேட்டைக்காக நேற்று முன்தினம் மாலை சென்றனர். அப்போது, சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த வெள்ளக்கல் மலையைச் சேர்ந்த தேவேந்திரன், மதன், காந்தி, மதி ஆகியோரை பிடிக்க முயன்றனர்.
ஆனால், காவல் துறையினரைப் பார்த்ததும் தப்பி ஓடிய சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதில், ஆயுதப்படை காவலர் சுரேஷின் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுரேஷ் அளித்த புகாரின்பேரில் 4 பேர் மீதும் வேலூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய 4 பேரையும் பிடிக்க வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago