காஞ்சிபுரம் அருகே வையாவூர் பகுதியில் 3 பேருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூரில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே, கிணற்றில் இருந்து தண்ணீரை இறைந்து அப்படியே குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வழங்கி வந்தனர். ஆனால் முறைப்படி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் ஏற்றி, அதில் குளோரின் கலந்துதான் மழைக்காலங்களில் குடிநீர் விநியோகிக்க வேண்டும். நேரடியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாராத் துறையினர் அந்தப் பகுதியில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டனர். கிணற்றில் இருந்து நேரடியாக குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த தண்ணீரையும் கீழே கொட்டும்படி அறிவுறுத்தினர்.
பின்னர் லாரிகள் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும்போது குளோரின் கலந்த பிறகே வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago