சேலம் அம்மாப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதி செய்துதரக்கோரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அம்மாப்பேட்டை, மாருதி நகர், ஒந்தாபிள்ளை காடு, அப்துல்கலாம் நகர் பகுதிகளிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழை நீர், சாக்கடை கழிவுகள் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி, அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தனர். பாய், தலையணை, பாத்திரம், குடங்களுடன் வந்த மக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி மண்டல அலுவலக உதவி ஆணையர் சித்ரா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி அங்கீகாரம் இல்லாத பகுதி என்பதால், உடனடியாக சாலை வசதி செய்து கொடுக்க முடியாது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று, சாக்கடை, சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி ஆணையர் சித்ரா உறுதி அளித்தார். இதனையடுத்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago