தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கடன் கிடைக்க நடவடிக்கை : ஆணையத் தலைவர் வெங்கடேசன் தகவல்

By செய்திப்பிரிவு

தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கடன் கிடைக்க, வங்கி அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும், என தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்கள் குறைதீர் கூட்டம், தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் கூறியதாவது:

தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. சரியான மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதில்லை. குழந்தைகளுக்கு தேசிய வங்கிகளில் கல்விக் கடன் மறுக்கப்படுகிறது. பெண்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் கூடுதல் நேரம் பணி புரிய நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் குறித்த உரிய விளக்கம் தருவதில்லை. ஒப்பந்தப்பணியாளர்கள் நியமனத்தை தடுத்து, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தூய்மைப் பணியாளர்களை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆணையத் தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:

தூய்மைப்பணியாளர்கள் தங்களது குறைகளை ஆணையத்திற்கு மனுவாக அனுப்ப வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் குழந்தைகளுக்கு கல்விக் கடன் கிடைக்க அனைத்து வங்கி அதிகாரிகளை அழைத்து விரைவில் கூட்டம் நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடைகளில் பணி செய்யும் போது மூச்சுத்திணறி தொழிலாளர் உயிரிழந்தால் உடனடியாக ஆணையத்திற்கு தகவல் தெரிவியுங்கள், என்றார்.

நிகழ்வில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்