விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு : ஈரோடு, நாமக்கல்லில் விவசாயிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து ஈரோடு, நாமக்கல், தருமபுரி மாவட்டம் பாலவாடி வரை உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதற்கென விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உயர் மின்கோபுரங்களில் குடியேறும் போராட்டத்தை நேற்று நடத்தினர்.

ஈரோட்டில் நசியனூரை அடுத்த சித்தன் குட்டையில் விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்கோபுரம் அருகே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கத்தின் நிர்வாகி கவின் கூறும்போது, விவசாயிகள் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட உயர் மின்கோபுர பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாணைப்படி இழப்பீடு வழங்க வேண்டும். போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், என்றார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பாலநாயக்கன்பாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:

உயர் மின்கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், வாடகையும் வழங்கப்படும், விவசாயிகளை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும், விவசாயிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து பேசாமல், எவ்விதப் பணிகளும் தொடங்கப்படாது என தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

இதனை மீறும் வகையில் தற்போது அதிகாரிகள் உயர் மின்கோபுரப் பணிகளைத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE