ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க - நெல்லை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் தனி வார்டு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கைகளுடன் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா முதல் மற்றும் 2-வது அலை தாக்கத்தின்போது இம்மருத்துவமனையில் 1,500 படுக்கைகளுடன் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தற்போது, கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், 180 படுக்கைகளுடன் கரோனா தனி வார்டு செயல்படுகிறது. இந்த வார்டில் 16 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 8 பேர் கரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவுக்காக காத்திருக்கிறார்கள். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.

தமிழகத்தில் தற்போது ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படாத நிலையில், விழிப்புடன் செயல்பட அனைத்து மாவட்ட அதிகாரிகளையும் அரசு அறிவுறுத்தியுள்ளது. முக்கிய மருத்துவமனைகளில் ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகளை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 180 படுக்கைகள் கொண்ட கரோனா தனி வார்டில், 100 படுக்கைகள் கொண்ட பகுதியை தனியாக பிரித்து ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் 24 மணி நேரத்தில் 1,500 முதல் 3 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் தனிவார்டுகளை ஏற்படுத்த நிர்வாகம் தயாராக உள்ளது. மாவட்டத்தில் 3 ஆக்சிஜன் உற்பத்தி கூடங்களும், 2 ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தி நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன.

இதனிடையே, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து திருவனந்தபுரம், மதுரை விமான நிலையங்களுக்கு வரும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை பெற்று, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், தடுப்பூசி செலுத்திக்கொண்ட தகவல்களை ஆய்வு செய்யவும், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில்களில் வருவோரை கண்காணிக்கவும், தடுப்பூசி செலுத்தவும் ரயில் நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE