12 நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு - கரோனா அறிகுறி இருந்தால் தெரிவிக்க வேண்டும் : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா தொற்று இருப்பின் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுமென ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், வங்கதேசம், மொரீசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இருப்பின், உடனடியாக அருகிலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மாவட்ட ஒருங்கிணைந்த கட்டளை மைய எண்ணிற்கு (80569 31110) தகவல் தெரிவிக்க வேண்டும் என ஈரோடு ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

நாளை தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 467 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இம்முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி 84 நாட்களானவர்கள் மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி 28 நாட்களானவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள உணவுக் கட்டுப்பாடு ஏதுமில்லை என்பதால், பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை. கரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் பாதிப்புகளைத் தடுக்க தடுப்பூசியே சிறந்த ஆயுதம் எனவும் ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்