கள்ளக்குறிச்சியில் டெங்கு நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் :

By செய்திப்பிரிவு

மழைக்காலங்களில் டெங்கு நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி பணியாளர்களைக் கொண்டு தீவிரப்படுத்தியுள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. மேலும், சில இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிகால் வாய்க்கால்கள் மூலமாக வெளியேற்றம் செய்யும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பி.என்.தர், உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் 368 தெருக்களிலும் நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு தினந்தோறும் துப்புரவு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

அப்பணிகளை நேற்று பார்வையிட்ட ஆட்சியர், மழைக்காலங்களில், கொசு உற்பத்தியினால் டெங்கு போன்ற நோய்கள் பரவும் சூழல் உள்ளதால் மழைநீர் தேங்கக்கூடிய தேங்காய் சிரட்டை, டயர், பிளாஸ்டிக் பாட்டில்கள், பெயிண்ட் டப்பாக்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், கல் உரல் போன்ற தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்களை குடியிருப்பு பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணி நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெங்கு போன்ற நோய்கள் பரவ காரணமான கொசுப்புழுக்களை அழிக்கும் விதமாக 5 புகை மருந்து இயந்திரம் மற்றும் வாகனத்தின் மூலம் இயக்கக்கூடிய இராட்சத புகைமருந்து இயந்திரத்தின் மூலம் சுழற்சி முறையில் கள்ளக்குறிச்சி நகராட்சி முழுவதும் புகைமருந்து அடிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர நோய்கள் பரவாமல் இருக்க அனைத்து சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புற பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் பராமரிக்க வேண்டும். நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டுமென ஆட்சியர் கேட்டுக் கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் என்.குமரன், நகராட்சி பொறியாளர் து.பாரதி மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்